Published in Dinamalar Tamil Daily News Paper on 8 May 2021
Article available on this link : https://www.dinamalar.com/news_detail.asp?id=2763851
விளை நிலங்கள், வீட்டில் உள்ள காலி இடங்களில், தோட்டங்கள் அமைத்து, பூ, காய், கனி, கீரை வகைகளை பயிரிட்டு வந்தது தான் காலங்காலமாக இருந்து வரும் மரபு. வீட்டின் மொட்டை மாடிகளிலும் கூட, தோட்டங்கள் அமைத்து, வீட்டுக்கு தேவையான காய்கறிகளை பயிரிட்டனர்.
இந்த வகையில், இப்போது, லேட்டஸ்ட்டாக வந்துள்ளது, மண் இல்லாத வீட்டு தோட்டங்கள்!'ஹைட்ரோபோனிக்' முறை என அழைக்கப்படும் இவ்வகை விவசாயத்திற்கு, மிக குறுகிய, சிறிய இடம் இருந்தால் போதும். மண் தேவை இல்லை; மிக குறைவான தண்ணீரே போதுமானது. சூரிய ஓளியும் கூட தேவையில்லை. வீட்டு தேவைக்கு மட்டமின்றி, வணிக ரீதியிலும் இது பலன் தருகிறது. குறைந்த முதலீட்டில் மீன் தொட்டி வைக்கும் அளவுள்ள இடத்தில் கூட, தோட்டம் அமைக்கும் இந்த புதிய தொழில்நுட்பம், தற்போது பிரபலமாகி வருகிறது.ஹைட்ரோபோனிக் தோட்டம் அமைக்க ஆலோசனை, பயிற்சி முகாம், அதற்கு தேவையான பொருட்களை சப்ளை செய்து வருகிறார், சென்னையை சேர்ந்த, 'இன்ஜினியரிங்' பட்டதாரி, ராகுல் தோகா, 33.அது குறித்து, அவர் விளக்கியதாவது:சென்னை அண்ணா பல்கலையில், 'இன்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி' இளங்கலை படிப்பை முடித்தேன். ஐரோப்பாவில் முதுகலை பட்டம்; தொடர்ந்து எம்.பி.ஏ., முடித்து, அங்கேயே கார்பரேட் நிறுவனத்தில், 18 மாதங்கள் வேலை. ஆனால், மனதில் நிறைவில்லை.தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசையில், 2016ல் சென்னை வந்து, 'கிரீன் ரஷ்' என்ற பெயரில், 'ஆர்கானிக் பிஸினஸை' ஆரம்பித்தேன். சர்க்கரை, பயறு வகைகள், காய்கறிகள், அரிசி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை, ஆர்டரின் பேரில் ஓட்டல்களுக்கு சப்ளை செய்தேன். ஓட்டல்களில் காய்கறி தேவையும் அதிகம் இருந்தது. காய்கறிகளையும் பயிரிட்டு சப்ளை செய்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது.ஏற்கனவே, ஹைட்ரோபோனிக் தோட்டங்கள் மேல் ஆர்வம் இருந்தது. பரிசோதனை முயற்சியாக என் வீட்டு மாடியில், 150 சதுர அடி இடத்தில், 6,000 செடிகள் பயிரிட்டேன்; நல்ல பலன் கிடைத்தது.
அதை தொடர்ந்து, தனியாக ஒரு இடத்தில், கீரை, செடியில் வளரும் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், மிளகாய், கொடியில் வளரும் அவரை, பீன்ஸ், புடலங்காய், தர்ப்பூசணி போன்றவற்றையும், மண்ணுக்கு அடியில் வளரக்கூடிய பீட்ரூட், இஞ்சி, வெங்காயம் போன்றவற்றையும் பயிரிட்டு வியாபாரம் துவங்கினேன்.தொடர்ந்து நல்ல பலன் கிடைத்ததால், 2019ம் ஆண்டு முதல் நண்பர்கள், உறவினர்கள் மட்டுமின்றி தோட்டம் அமைக்க விரும்புவோருக்கு ஆலோசனை கொடுப்பது, பயிற்சி முகாம்கள் நடத்துவது, அதற்கு தேவையான பொருட்களை சப்ளை செய்வதையும் தொழிலாக செய்து வருகிறேன்.தோட்டம் அமைக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இலவசமாக ஆலோசனைகள் வழங்குகிறேன். இதுவரை, 500க்கும் மேற்பட்டோர், என்னிடம் ஆலோசனை பெற்று தோட்டங்கள் அமைத்துள்ளனர். அவர்களில் நடிகை சுகாசினியும் ஒருவர். தோட்டங்கள் அமைத்து காய்கறி பயிரிட்டு, சிலர் வீட்டு தேவைகளுக்காகவும், சிலர் வியாபாரமாகவும் செய்து வருகின்றனர். சீசனுக்கு ஏற்ற பயிர்களை இதில் பலன் பெறலாம். அந்தந்த பகுதியில் உள்ள தட்பவெப்ப சூழ்நிலையில் எந்த வகையான காய்கறிகள், பழங்கள் பயிரிட முடியுமோ அதை பயிரிடலாம்.இந்த முறையில் விளையும் காய்கறி, பழம், கீரைகளை தரப்பரிசோதனை செய்து பார்த்ததில் மண்ணில் விளையும் அதே தரம், சுவை, கொண்டதாக உள்ளது. இது குறித்து மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள, acquafarms.org என்ற இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு ராகுல் தோகா கூறினார்.'ஹைட்ரோபோனிக்ஸ்' தோட்டம்வீட்டில் அமைப்பது எப்படி?ஹைட்ரோபோனிக்ஸ் தோட்டத்தை, ஆறு வகையான முறைகளில் அமைக்கலாம். ஒரு வீட்டுக்கு தேவையான காய்கறி பயிரிட,- 240 சதுர அடி வரையில், வீட்டின் அறைகளில், கார் பார்கிங், மொட்டை மாடி போன்ற இடங்களில் கூட அமைக்கலாம்.சிறிய அளவிலான வியபாரத்திற்கு, 500 - 1000 சதுர அடியில், வீட்டின் மொட்டை மாடி, காலி இடங்களில் அமைக்கலாம்.
காலி இடமாக, 5000 - 20000 சதுர அடி கிடைத்தால், மார்கெட், ஹோட்டல் போன்ற இடங்களுக்கு சப்ளை செய்யும் அளவிற்கு காய்கறி, பழம், கீரை உற்பத்தி செய்ய முடியும். ஏக்கர் கணக்கிலும் இந்த தோட்டத்தை அமைக்க முடியும்.துளைகள் இடப்பட்ட, 'பிவிசி' பைப்புகளை சுவற்றில் ரேக்குகள் போன்ற அடுக்குகள் அல்லது தரையில் மேசை போன்ற சட்டங்களை அமைத்து பொறுத்த வேண்டும். இருக்கும் இட வசதியை பொறுத்து, பிவிசி சட்டங்களின் எண்ணிக்கையும், செடிகளின் எண்ணிக்கையும் இருக்கும்.பைப்களில் நீர் நிரப்பி விதைகள் போட வேண்டும். மண்ணில் இருந்து செடிகளுக்கு தேவையான கனிமங்கள், வைட்டமின்களை பிரித்தெடுத்து, அதனுடன் இயற்கையான முறையில் தயாரான உரங்கள் என, செடிகளுக்கு தேவையான, 16 வகையான சத்து பொருட்களை, தண்ணீரில் கலந்து விடுவதால், நேரடியாக அவை வேர்களுக்கு செல்கிறது.மண் விவசாயத்தில், சில விதைகள் நன்கு வளர்ந்து பலன் கொடுக்கும்; சில விதைகள் விளையாமல் கூட போகும். அதே போல் ஊட்டச்சத்துகள் பயிர்களுக்கு முழுமையாக, சீராக கிடைக்காமல் போகும்.
ஆனால், இந்த முறையில், தண்ணீர், சுழற்சி முறையில் சீராக சென்று கொண்டே இருப்பதால், ஊட்டச்சத்துகள் முழுமையாக, அனைத்து செடிகளுக்கும் கிடைக்கும். இதனால் செடிகள், இலைகள், காய் கனிகள் அனைத்துமே, ஒரே அளவில் சீராக வளர்ந்து பலன் கொடுக்கும்.எந்தவித பூச்சிகொல்லி மருந்துகளோ, கெமிக்கலோ இல்லாத ஆர்கானிக் விவசாய முறை இது. புழு, பூச்சிகளால் செடிகள் பாதிப்பது, களைகள் வளரும் வாய்ப்புகள் இதில் கிடையாது.செடிகளில் கொசு வராமல் இருக்க, வேப்ப எண்ணெயை சிறிது ஸ்பரே செய்து விட்டால் போதும்.எவ்வளவு தண்ணீர் தேவைஒரு வீட்டிற்கு தேவையான காய்கறிகளை பயிரிட அதிகபட்சமாக, 40 லிட்டர் தண்ணீர் போதுமானது. மற்ற முறை விவசாயத்திற்கு செலவழிக்கும் தண்ணீரை விட, 10 சதவீதமே ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயத்துக்கு தேவைப்படும்.
ஒரு கேனில் தண்ணீர் நிரப்பி மோட்டர் பொருத்தப்படும். ஒரு மீன் தொட்டியில் ஓடும் மோட்டாருக்கு தேவைப்படும் அளவுக்கே, இதற்கும் மின்சாரம் தேவைப்படும். சூரிய ஒளி இல்லாத இடத்தில் கூட, 'எல்இடி' லைட் மூலம், செடிகளுக்கு ஒளி கொடுக்கலாம்.பட்ஜெட் எவ்வளவுமுதலீட்டை பொறுத்தமட்டில், 300 ரூபாய் பட்ஜெட்டில், இரண்டு கீரைகள் அல்லது காய்கறிகள் பயிரிடலாம். இடத்திற்கு ஏற்றவாறு, முதலீடு லட்சங்கள் வரை போகும்.
Published in Dinamalar Tamil Daily News Paper on 8 May 2021
Article available on this link : https://www.dinamalar.com/news_detail.asp?id=2763851
Comments